சதுரகிரியில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட2000 பேர் உயிருடன் மீட்பு 10 பேரில் 4 பேர் சடலம் மீட்பு.


இவர்களில் பலர் மலை அடிவாரத்தில் உள்ள தாணிப்பாறை நீர்வீழ்ச்சியில் நேற்று மதியம் மகிழ்ச்சியாக குளித்துக்கொண்டிருந்தனர். மதியம் சுமார் 1 மணி அளவில் திடீரென்று அங்கு பலத்த மழை பெய்தது.
இதனால் அருவியில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதில் அங்கு குளித்துக்கொண்டு இருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு அருவியின் கரைக்கு சென்று தப்பினார்கள். 

ஆனால் மறுகரையில் உள்ள அடிவாரப் பகுதிக்கு வரமுடியாமல் 200-க்கும் மேற்பட்டவர்கள் தவித்தனர். இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தாணிப்பாறை பகுதிக்கு விரைந்தனர். காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி தவிப்பவர்களை மீட்க அவர்கள் நடவடிக்கை மேற்கொண்டனர். இவர்கள் தவிர சதுரகிரி மலை மீது பெண்கள், குழந்தைகள் என 2 ஆயிரம் பேர் தங்கி இருப்பதும், அவர்களும் வெள்ளத்தை தாண்டி கீழே இறங்கி வரமுடியாமல் தவிப்பதும் தெரியவந்தது. வெள்ளத்தில் சிக்கியவர்களை கயிறு மூலம் மீட்புக்குழுவினர் மூலம் மீட்டனர். 

மலையில் உள்ள மரங்களில் ஏராளமானோர் மரக்கிளைகளை பிடித்து தொங்கியபடி இருப்பதாக தெரிவித்தனர். மீட்புக்குழுவினர் 8 குழுக்களாக பிரிந்து மலைப்பகுதிக்கு சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.

சதுரகிரி மலையில் உள்ள பிலாவடி கருப்பசாமி கோவில் மற்றும் விநாயகர் கோவில் அருகே மொத்தம் 10 பேர் வரை அடித்துச் செல்லப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது. இதில் ஒரு வாலிபரின் உடலை மலையில் இருந்து இறங்கி வந்தவர்கள் மீட்டு மீட்புக்குழுவினரிடம் ஒப்படைத்தனர். அவர் வத்திராயிருப்பைச் சேர்ந்த பொன்ராஜ் (வயது 19) என்பது தெரியவந்தது. இது தவிர மேலும் 3 பேரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

வேறு உடல்கள் எதுவும் கிடக்கிறதா? என்று மீட்புக்குழுவினர் கண்காணித்தனர். ஆனால் உடல் எதுவும் கிடைக்கவில்லை. மீட்கப்பட்டவர்கள் தாணிப்பாறை அடிவாரத்தில் இருந்து அரசு பஸ்களில் ஏற்றிச் செல்லப்பட்டனர். தகவல் கிடைத்து அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, கலெக்டர் ராஜாராமன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணிகளை பார்வையிட்டனர். 

20 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து 125-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.

No comments:

Post a Comment