வேளாண் தொழில் நலிவடைந்து வருவதோடு, விளைநிலங்கள் கான்கிரீட் காடுகளாக மாறிவருகின்றன. இந்த நிலையில் பிரதமர் இன்று தொடங்கி வைக்கும் வேளாண் தொலைக்காட்சியில் வேளாண் மற்றும் வேளாண்சார் துறைகள் பற்றிய நிகழ்ச்சிகள் இடம்பெற உள்ளன. தொலைக்காட்சியின் வடிவமைப்பிற்காக 50க்கும் மேற்பட்ட சிறப்பு பயிற்சி பெற்ற விவசாய வல்லுநர்களும், தொழில்நுட்ப ஊழியர்களும் பணியாற்றி வருகின்றனர். இந்த தொலைக்காட்சி விவசாயத்துறையை மேலும் வலுப்படுத்தவும், விவசாயத்தின் மீதான ஆர்வத்தை மக்களிடையே ஏற்படுத்தவும் உதவும் என்கிறார் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் அனில் பலூனி.
கடந்த நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நாட்டின் விவசாய சூழலை தெரிந்து கொள்ளும் வகையில் விவசாயத்திற்கான பிரத்யேக தொலைக்காட்சி தொடங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. மோடி தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்று ஓர் ஆண்டு நிறைவு செய்த பின்னர் இதுபோன்ற தொலைக்காட்சியை தொடங்குவது அரசியல் நோக்கம் கொண்டது என குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகின்றன.
நிலம் கையகப்படுத்தும் சட்டத்திற்கு நாடு முழுவதும் எழுந்த கடும் எதிர்ப்பை அடுத்து பிரதமர் மோடி விவசாயிகளின் ஆதரவை பெறுவதற்கான பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அந்த அடிப்படையில் ”மன் கி பாத்” வானொலி நிகழ்ச்சியின் மூலம் விவசாயிகளின் நலனில் மத்திய அரசுக்கு அக்கறை இருப்பதை வெளிப்படுத்தியதோடு, பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கூடுதல் இழப்பீட்டு நிதி வழங்கியும் தனது ஆதரவை தெரிவித்துவருகிறார். டெல்லி மதுராவில் நேற்று நடைபெற்ற விவசாயிகளின் பேரணியிலும், விவசாயிகளின் நண்பனாக பாஜக அரசு உள்ளது என்பதை பிரதமர் மோடி கூறினார்.
விவசாயிகளுக்கான இந்த 24 மணி நேர தொலைக்காட்சியில் விவசாயம் சார்ந்த சிறப்பு செய்தி தொகுப்புகள், விவாதங்கள் மற்றும் உலக நாடுகளின் விவசாயத்துறை குறித்த சிறப்பு தகவல்கள் இடம் பெறும். 30 நிமிட சிறப்பு வேளாண் செய்திகள், விவாத நிகழ்ச்சிகளை ஒளிபரப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது. கிராமப்புற மக்கள் இந்த தொலைக்காட்சியை எளிதாக பார்க்கும் வகையில் அனைத்து கேபிள் மற்றும் டிடிஎச் சேவைகளில் கட்டாயமாக இந்த தொலைக்காட்சியை ஒளிபரப்ப மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பிரதமர் மோடியினால் தொடங்கப்படும் கிசான் தொலைக்காட்சி, அரசியல் தலையீடுகளையும் மீறி விவசாயத்துறையை வளர்ச்சி பாதைக்கு எடுத்து செல்ல வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
No comments:
Post a Comment